ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலை ரெயில் சேவை தொடங்கியது
ஊட்டியில் இருந்து குன்னூருக்கு நேற்று முதல் சிறப்பு மலைரெயில் சேவை தொடங்கியது. சுற்றுலா பயணிகள் இதில் பயணித்து செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி
ஊட்டியில் இருந்து குன்னூருக்கு நேற்று முதல் சிறப்பு மலைரெயில் சேவை தொடங்கியது. சுற்றுலா பயணிகள் இதில் பயணித்து செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
மலை ரெயில்
மலைகளின் அரசியான ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2-வது சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தரும்போது, ஆயிரக்கணக்கானோர் ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம் அடைகின்றனர். இதையடுத்து சீசனின்போது சிறப்பு மலை ரெயிலை இயக்க சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி நீலகிரி சிறப்பு மலை ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது.
குன்னூர்-ஊட்டி
இதன்படி நேற்று குன்னூரில் இருந்து கேத்தி, லவ்டேல் வழியாக ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கம் தொடங்கியது. காலை 8.10 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, ஊட்டிக்கு 9.40 மணிக்கு வந்தடைந்தது. சிறப்பு மலை ரெயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் 120 பேர் பயணம் செய்தனர். அவர்கள் ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்த நீங்கா நினைவுடனும், மகிழ்ச்சியுடனும் ரெயில் நிலையம் வந்திறங்கினர்.
இதேபோல் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு மாலை 4.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு, 5.55 மணிக்கு குன்னூர் சென்றது. இதில் முதல் வகுப்பு கட்டணமாக ரூ.630, இரண்டாம் வகுப்பு கட்டணமாக ரூ.465 வசூல் செய்யப்படுகிறது.
இதுதவிர நேற்று முதல் ஊட்டியில் இருந்து கேத்திக்கு காலை 9.45, 11.30, மதியம் 3 மணிக்கும், கேத்தியில் இருந்து ஊட்டிக்கு காலை 10.10, மதியம் 12.10, 3.30-க்கும் சிறப்பு மலை ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் சேவை வாரத்தில் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி வரை இந்த சேவை இருக்கும்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரெயில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 2.25 மணிக்கு வந்தடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
மறக்க முடியாத அனுபவம்
இதற்கு இடையே சிறப்பு ரெயில் சேவை அல்லாது, வழக்கமாக இயங்கும் மற்ற ரெயில் சேவையும் பயன்பாட்டில் உள்ளது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து இதில் பயன்பெறலாம்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மலை ரெயில் வனப்பகுதிகள் வழியே குகைகளை கடந்து வந்தது புதிய அனுபவமாக இருந்தது. அப்போது இயற்கை அழகை கண்டு ரசித்தோம். தேயிலை தோட்டங்கள், பசுமையான மரங்கள், வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகள், கேத்தி பள்ளத்தாக்கு போன்றவற்றை பார்த்தோம். ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ததை மறக்க முடியாது என்றனர்.
இதேபோல் சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள், அதன் முன்பு நின்று தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.