உத்தமர் கோவிலில் ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம்
உத்தமர் கோவிலில் ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது.
கொள்ளிடம் டோல்கேட்:
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற வேண்டி திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் ஞான சரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் ராமர் மண்டபத்தில் ஞான சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து ஆவாகனம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டி சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஞான சரஸ்வதிக்கு மாதுளை, வாழைப்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்கள், பால், திரவியப்பொடி, மஞ்சள்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டு தேர்வுக்கு பயன்படுத்தும் பேனா, பென்சில் போன்றவற்றை ஞான சரஸ்வதியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.