வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி:
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு திருப்பலி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சேவியர் திடலில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நன்றி வழிபாடும், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடந்தது.
புத்தாண்டு பிறந்ததாக அறிவிப்பு
இரவு 11.50 மணிக்கு மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் பாதிரியார்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்களுக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் மறைமாவட்ட ஆயர், சரியாக 12 மணிக்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறந்ததாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது.
இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனை
இந்த சிறப்பு திருப்பலியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புத்தாண்டையொட்டி நேற்று காலை வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
மின்விளக்குகளால் ஆன வளைவு
மேலும் கீழ் கோவிலுக்கு செல்லும் பாதை, விண்மீன் ஆலயத்திற்கு செல்லும் பாதை, தியான மண்டபம் அருகில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின்விளக்குகளால் ஆன வளைவு அமைக்கப்பட்டிருந்து. புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையை முன்னிட்டு திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஜெர்மனியை சேர்ந்த 265-வது போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் நேற்று முன்தினம் வாடிகனில் உயிரிழந்ததையொட்டி பேராலயம் சார்பில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.