மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்
வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது
வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்க தலைவர் ரேவதி ஜானகிராம் வரவேற்றார். செயலாளர் சம்பத்குமாரி பெண்கள் மருத்துவ பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து பேசினார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்து பேசினர். இதில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், வருமுன் காப்பதே சிறந்தது. எனவே நோய் வருவதற்கு முன்பே நமது உடல்நலம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மக்கள் முன்வரவேண்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் வரக்கூடிய புற்றுநோயை பரிசோதனை மூலம் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நோய் முழுமையாக குணமடையலாம். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வரலாற்றில் முதல் முறையாக ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஏறத்தாழ 5 ஆயிரத்து 465 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்றார். பின்னர் மலைக்கிராமங்களில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிழியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.