புகழூர் காகித ஆலை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
புகழூர் காகித ஆலை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
புகழூர் காகித ஆலை மற்றும் கோவை தனியார் மருத்துவமனை சார்பில் காகித ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை காகித ஆலை நிறுவன செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
முகாமில் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதேஷ்வரன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மூளை, நரம்பியல், முதுகு தண்டுவடம், நுரையீரல், சிறுநீரகம் உள்பட அனைத்து நோய் அறிகுறிகளுக்கும் பொதுமருத்துவம் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
பின்னர் ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, பி.எம்.டி, இ.சி.ஜி. பரிசோதனைகளும் செய்யப்பட்டது. கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு உரிய மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாமில் சுமார் 692 பேர் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமில் முதன்மை மேலாளர் வனத்தோட்டம்-அபிவிருத்தி) சீனிவாசன், கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காகித ஆலை மனிதவள துறை பொது மேலாளர் கலைச்செல்வன் தலைமையில் மனித வளத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.