புதுக்கோட்டையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
புதுக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடக்கிறது
சிறப்பு மருத்துவ முகாம்கள்
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டார ஊரகப் பகுதிகளிலும், 2 நகராட்சி பகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு 3 மருத்துவ முகாம் வீதம் 45 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாம் மூலம் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் தேவைப்படுபவருக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்பு பணிகள்
மேலும் காய்ச்சல் முகாம் நடைபெறும் பகுதிகளில் சுற்றுப்புற சுகாதாரம், கொசு ஒழிப்பு பணிகள், குடிநீர் சுகாதாரம் மற்றும் நலக்கல்வி அளிக்கும் பணிகள் ஆகியவற்றை இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.
எனவே தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று தங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.