தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு
பாவூர்சத்திரம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தம்பதி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 88). இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி (83). இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள்.
இவர்கள் சம்பவத்தன்று இரவு தங்களது வீட்டில் இருந்தனர். அப்போது, வீட்டின் சுவர் ஏறிக்குதித்து முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
140 பவுன் கொள்ளை
அவர்கள் அங்கு இருந்த அருணாச்சலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோரை கட்டிப்போட்டனர். பின்னர் பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த அருணாச்சலத்தின் மகள் ராணி தனது பெற்றோர் கட்டப்பட்டு இருப்பதையும், நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
தனிப்படை
இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.