தையல் கடை உரிமையாளர் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை
தையல் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தையல் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தையல் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), திருவண்ணாமலை திருவூடல் தெருவில் தையல் கடை வைத்து இருந்தார். இவரது மனைவி பிரபாவதி. அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் தையல் தொழில் மட்டுமின்றி பைனான்ஸ் மற்றும் ரியஸ் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இந்த நிலையில் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து நல்லவன்பாளையம் நோக்கி சென்றார். அப்போது தாமரை நகரில் செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனிப்படை போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டராம்பட்டு சாலை வழியாக சென்றது தெரியவந்தது.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டியால் ஆறுமுகத்தை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.