கோவில்களில் சிறப்பு பூஜை
கோவில்களில் சிறப்பு பூஜை
காங்கயம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சாமி தரிசனம் செய்ய கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை தினத்தன்று ேகாவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால், வீடுகளில் செல்வம் பெருகும். மன அமைதி கிடைக்கும். தொழில் விருத்தியடையும் என்பது நம்பிக்கை. அதன்படி நேற்று ஆடி அமாவாசை தினம் என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரானை நடந்தது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பூர், காங்கயம், குண்டடம், தாராபுரம், நத்தக்காடையூர் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் ேகாவில், ரகுபதிநாராயணப் பெருமாள் கோவில், பழையகோட்டை சாலை காசி விஸ்வநாதர் கோவில், அகிலாண்டபுரம் அகஸ்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில், காடையூர் காடேஸ்வரர் கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேலும் கொங்கு சமுதாயத்தின் குல தெய்வ கோவில்கள் பெரும்பாலும் காங்கயத்தை சுற்றியே அமைந்துள்ளதால் காங்கயம் பஸ் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.
வீரக்குமாரசாமிகோவில்
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், சோளீஸ்வரர் கோவில், விநாயகர் கோவில், செல்லாண்டியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.