காலபைரவருக்கு சிறப்பு பூஜை


காலபைரவருக்கு சிறப்பு பூஜை
x

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

புன்னம் பகுதியில் உள்ள புன்னை வன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத்திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவர், புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். அதேபோல் குந்தாணிபாளையம் நத்தம் மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி உடனுறை மாதேஸ்வரன் கோவில் உள்ள கால பைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டாரத்தில் சிவன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள சொர்ண பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்ணிற ஆடை உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் பெண் பக்தர்கள் தாங்கள் அணிந்து இருந்த தங்கசங்கிலி, மோதிரம், வளையல்களை பூஜையில் வைப்பதற்காக கொடுத்தனர். ஆண்கள் தங்களுடைய வாகனம், பணப்பெட்டி ஆகியவற்றுக்கான சாவிகளையும், கொடுத்து பெற்றுக்கொண்டனர். இதேபோல் மண்மங்கலம் மணிகண்டேஸ்வர் கோவில், நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர், காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை மீது அமைந்துள்ள விராசிலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்பட 16 வகையான வாசனைதிரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் தேங்காய் மற்றும் பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றப்பட்டது. இதேபோல் தோகைமலை மலை மீது அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சிவாலயம் சிவாபுரிஸ்வரர் கோவில், சின்னரெட்டிபட்டி ஆவுடையலிங்கேஸ்வரர் கோவில், தோகைமலை மார்க்கண்டேய கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story