ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

ஆடி வெள்ளி

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகள்

இதேபோல் மனோன்மணி அம்மன் கோவில், பூங்கா நகர் மகா சக்தி மாரியம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவுடையார்கோவில் அருகே விளானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாம்பணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனை வழிபட்டால் விஷ பூச்சிகள் மனிதர்களை கடிக்காது என்றும், வீட்டிற்கு விஷ பூச்சிகள் வராது என்பது ஐதீகம். அதனால் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல் வீடுகளில் வளர்க்கும் கோழிகள் சீக்கு இல்லாமல் வளர்ந்தால் பாம்பணி அம்மனுக்கு சேவலை காணிக்கையாக செலுத்தப்படும் என்று வேண்டிக்கொண்டு அந்த சேவலை காணிக்கையாக பாம்பணி அம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் அருகே உள்ள நந்தவனம் பகுதியில் அமைந்துள்ள பொற்பனைக்கோட்டையை சேர்ந்த ஏழுமுக காளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பட்டாடை உடுத்தி மலர் அலங்காரமும், மகா தீபமும் காட்டப்பட்டது. இதேபோல் திருக்கட்டளை சுந்தர மாகாளியம்மன் கோவில், பொருபனை கோட்டை காளியம்மன் கோவில், இம்மனாம்பட்டி மாரியம்மன் கோவில், பாரதியார் நகர் புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவில், திருவரங்குளம் பிடாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் மேல்மருவத்தூர் மற்றும் சமயபுரம் கோவில்களுக்கு செல்கின்ற பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

விராலிமலை

விராலிமலையில் பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால், பழம் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.


Next Story