விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி விழா

முழு முதற்கடவுளான விநாயகர் பிறந்தநாளான ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அதிகாலை முதலே விநாயகர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கல விநாயகர் கோவிலில் விநாயகருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல பல்லவன் குளம் அருகே உள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகர் கோவிலில் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது.

சிறப்பு அபிஷேகம்

புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பஞ்சமுக விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல டவுன், திருக்கோகர்ணம், கணேஷ்நகர் பகுதிக்குட்பட்ட இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் வீடுகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர். சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்தனர். அப்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், பொரி, கடலை, மோதகம் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். இதேபோல பொதுஇடங்களில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

ஊர்வலம்

இதேபோல மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கிடையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

ஆதனக்கோட்டை, திருவரங்குளம்

ஆதனக்கோட்டை அருகே குப்பையன்பட்டி கிராமத்தில் வீரடிவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிஷேகம், சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவரங்குளம் தெப்பக்குளக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கேப்பரை செல்வ விநாயகர் கோவில், மேட்டுப்பட்டி சரளை பள்ளம் தரிசன விநாயகர் கோவில், பொற்பனை கோட்டை, வேப்பங்குடி, வம்பன் நால்ரோடு பகுதியில் உள்ள விநாயக கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கீரமங்கலம்

கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்தனர். கீரமங்கலம் அண்ணா நகர் உள்பட பல இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னவாசல், இலுப்பூர்

அன்னவாசல், கோல்டன்நகர், இந்திராகாலனி, இலுப்பூர், புதூர், காட்டுப்பட்டி உள்ளிட்ட அன்னவாசலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதூர்த்தியையொட்டி பொது இடங்களில் கொட்டகை அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதனையடுத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story