முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்

ஆடி கிருத்திகை

முருகப்பெருமானுக்கு கிருத்திகை நாள் மிகவும் உகந்ததாகும். அதிலும் ஆடி கிருத்திகை கூடுதல் விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஆடி கிருத்திகையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆடி கிருத்திகையன்று பக்தர்கள் விரதம் இருந்து முருகனை மனமுருகி வேண்டினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று காலை பாலமுருகனுக்கு மஞ்சள், தயிர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரவு பாலமுருகனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பால்குட ஊர்வலம்

குரும்பலூரில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவிலில் உள்ள சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு ஆடி கிருத்திகை விழா நடந்தது. முன்னதாக காலையில் சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம், தீர்த்த கூடம் சுமந்தும் தேரோடும் வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலுக்கு மதியம் வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பால், தீா்த்தம் மற்றும் வாசனை திரவியங்களால் சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சண்முக சுப்ரமணிய சுவாமி கேரள செண்டை மேளம் முழங்க வீதியுலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் கிருத்திகை விழா குழுவினர் செய்திருந்தனர்.

பிரம்மபுரீஸ்வரர் கோவில்

ஆடி கிருத்திகையையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கும், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story