முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகை
முருகப்பெருமானுக்கு கிருத்திகை நாள் மிகவும் உகந்ததாகும். அதிலும் ஆடி கிருத்திகை கூடுதல் விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஆடி கிருத்திகையான நேற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆடி கிருத்திகையன்று பக்தர்கள் விரதம் இருந்து முருகனை மனமுருகி வேண்டினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அரியலூர்-கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குறைதீர்க்கும் குமரன் கோவிலில் உள்ள முருகனுக்கு பால், தயிர், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் தரிசனம் அளித்தார். அப்போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலவனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதேபோல் பாலதண்டபாணி கோவில் உள்பட நகரின் பல்வேறு கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வில்லேந்தி வேலவர்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தார்.
வில்லேந்தி வேலவருக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. வள்ளி, தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது. கோவிலில் பக்தர்கள் முருகப்பெருமானை நோக்கி பல்வேறு பதிகங்களை பாடி வழிபாடு மேற்கொண்டனர்.
பசுபதீஸ்வரர் கோவில்
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தர நாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலிலும், கோடாலி கருப்பூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் உள்பட தா.பழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.