ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகை
ஆடி மாதம் ஆன்மிகம் நிறைந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு விசேஷங்கள் அதிகம் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை கவுரவிக்க, ஆறு பெண்களையும் "கிருத்திகை" நட்சத்திரமாக மாற்றினார். கிருத்திகை நட்சத்திர தினத்தில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கமும் ஏற்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகளும் சிறப்பானதாகும்.
இந்த நிலையில் நேற்று ஆடி கிருத்திகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வெள்ளிக்கவசம்
புதுக்கோட்டையில் தண்டாயுதபாணி சாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் குமரமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கவசத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விராலிமலை முருகன் கோவில்
விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி மலைமேல் உள்ள முருகன்- வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முருகன் கோவில் மலையை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து மலைமீது ஏறி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா நடைபெற்றது.
நாட்டிய குதிரைகள்
கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் குளமங்கலம் தெற்கு வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி கடந்த 17-ந் தேதி இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடிப்பெருந்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.
நேற்று காலை டிரம்ஸ் இசைக்கலைஞர்களின் இசையோடு 9 நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் விழாவும், நாளை (திங்கட்கிழமை) மாலை தேரோட்டமும் நடக்கிறது.
கிடா வெட்டுதல்
திருமயம் தாமரவயலில் அமைந்திருக்கும் அடைக்கலம் காத்தார் மற்றும் அய்யனார் பரிவார தெய்வங்களுக்கு 5-ம் ஆண்டு ஆடி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அடைக்கலம் காத்தார் மற்றும் அய்யனார், பட்டவன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சைவ பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் 11 மணியளவில் சின்ன கருப்பர், பெரிய கருப்பர், பட்டமரத்து காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் சாமி அழைப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 12 மணியளவில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சின்ன கருப்பு, பெரிய கருப்பர், பட்டமரத்து காளியம்மனுக்கு முனி படைப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை 8 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.