பிரதோஷம், சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் தரிசனம்
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரி விழா
மகா சிவராத்திரி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு சிவன் கோவில்களில் விடிய, விடிய பல்வேறு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இன்மையில் நன்மைதருவார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நேற்று பல்வேறு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் பிரளயநாத கோவிலில் நந்திபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர்.
அதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவளவயநல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் கருவறையில் உள்ள 5 சன்னதிகளில் ஒன்றாக சத்தியகிரிஸ்வரர் சன்னதி அமைந்து உள்ளது. இங்கு நேற்று மாலை 5 மணியளவில் வழக்கம்போல பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலும் சிவராத்திரியையொட்டி சத்தியகிரிஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நேற்று இரவு 12 மணியளவில் அர்த்தசாம பூஜை நடைபெற்று 1 மணிக்கு நடைசாற்றப்பட்டது. சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் பூஜைகள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் சிவபெருமானுக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு 4 கால பூஜைகள் நடைபெற்றது. சரவண பொய்கைகரையில் உள்ள சிவபெருமானுக்கு சர்வபூஜை நடைபெற்றது. இதேபோல திருநகர் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் காசிவிசுவநாதருக்கு 4 கால பூஜைகள் நடைபெற்றது.
போக்குவரத்து நெரிசல்
பாலமேட்டில் மாசி மாத சனி பிரதோஷ பூஜைகள் பொது மகாலிங்க சுவாமி ஜீவ சமாதி, கோவிலில் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள சிவன்-பார்வதி கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. காஞ்சரம்பேட்டை, பாறைபட்டி சிவன் கோவில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடந்தது.
சிவராத்திரியையொட்டி டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குலதெய்வ கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குல தெய்வ கோவில்களில் விடிய விடிய தங்கி தரிசனம் செய்தனர். இதனால் பேரையூர், டி.கல்லுப்பட்டி, பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல் உசிலம்பட்டி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட மையப்பகுதியில் உள்ளதால் நேற்று குலதெய்வ வழிபாடுகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்ததால் உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.