சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிவன்கோவில்களில் சிறப்பு பூஜை


சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு  சிவன்கோவில்களில் சிறப்பு பூஜை
x

சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிவன்கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருச்சி

ஐப்பசி மாத சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி, திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், பெரியகடை வீதியில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில், நாகநாதர் கோவில், தான்தோன்றீஸ்வரர்கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோன்று தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமான கைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனிப்பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது.

இதேபோல் துறையூரில் உள்ள நந்திகேஸ்வரர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில், நல்லியம்பாளையம் சிவன் கோவில், புலிவலம் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. துறையூரை அடுத்துள்ள நல்லியம்பாளையம் சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று கீரம்பூரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story