பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை


பங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

பங்குனி உத்திர திருவிழா

கறம்பக்குடி அருகே உள்ள செவ்வாய்ப்பட்டியில் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்தும், மா விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். விழாவையொட்டி கறம்பக்குடியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டன.

கறம்பக்குடி முருகப்பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தேவசேனாவுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வேம்பையன் கோவிலில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சாமி கும்பிட்டனர். ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் மழையூர், வெட்டன்விடுதி, ரெகுநாதபுரம் பகுதிகளில் உள்ள முருகன், அய்யனார், அம்மன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

குதிரை சிலைக்கு மாலைகள்

கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோவில் பங்குனி உத்திரதிருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. நேற்று காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர். நேற்று மாலை தீர்த்த திருவிழாவையொட்டி கீரமங்கலம் கிராமத்தின் சார்பில் சுவாமிக்கு பட்டு சீர் கொண்டு செல்லும் நிகழ்வு சிவன் கோவிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளம், நாட்டிய குதிரைகளுடன் கிராமத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பட்டு, சீர் வந்த பிறகு தீர்த்த திருவிழா நடந்தது.

அதேபோல் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் முன்பு அமைந்துள்ள பிரமாண்ட குதிரை சிலைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காகிதப்பூ மாலைகளை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்களும் செய்யப்பட்டன. இதேபோல் கீரமங்கலம் பகுதியில் உள்ள ஏராளமான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தெப்ப உற்சவம்

குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.

தொடர்ந்து அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பத்திரு விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

உஜ்ஜயினி மாகாளி அம்மன்

மணமேல்குடி உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வாண வேடிக்கையுடன் உஜ்ஜயினி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார்.

வீரமாகாளி அம்மன்

திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் வீரமாகாளி அம்மன் கோவில் பங்குனித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குள நாதர் கோவிலில் இருந்து வீரமாகாளியம்மன் எழுந்தருள செய்து அபிஷேக ஆராதனைகள் செய்து பட்டாடை உடுத்தி மலர் அலங்காரம் செய்து பக்தர்கள் ஊர்வலமாக வம்பன் வீரமா காளியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாஞ்சன் விடுதி, கொத்தக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் மண்டகப்படிதாரர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தினமும் மண்டக படிதாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 8-நாள் திருவிழாவைெயாட்டி மாஞ்சான் விடுதி, கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்கள் சார்பாக வருகிற 11-ந் தேதி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற உள்ளது.


Next Story