ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு பூஜை


ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு பூஜை
x

ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜை நடக்கிறது.

பெரம்பலூர்

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு ஆடிப்பெருக்கையொட்டி ஆஞ்சநேய பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றுக்கு சென்று, அங்கிருந்து காலை தீர்த்த குடங்களில் ஆற்றில் புனித நீர் எடுத்து பாதயாத்திரையாக பெரம்பலூருக்கு இரவு வந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

அதனை தொடர்ந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். மதனகோபாலசுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

பால்குட ஊர்வலம்

இதேபோல் துறைமங்கலம் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடக்கிறது. குன்னம் தாலுகா சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலின் வெள்ளாற்று கரையில் ஆடிப்பெருக்கையொட்டி திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணமாக வேண்டி சிறப்பு வழிபாடும், திருமணமான பெண்கள் தங்களுடைய தாலி கயிற்றை புதியதாக மாற்றி சடங்குகளை செய்வாா்கள்.

ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் பகுதியில் உள்ள ஊட்டத்தூர் பிரிவு ரோடு செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில், பஞ்சாயத்து ஆபீஸ் செல்லும் சாலையில் உள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவிலுக்கும், பாடாலூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி ஊர்வலம் நடைபெறும். அந்த கோவில்களிலும் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து குடங்களில் எடுத்து வரும் தீர்த்தம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்படும்.


Next Story