பக்ரீத் பண்டிகை: மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் நேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகை
அன்பையும், தியாகத்தையும் வெளிகாட்டும் விழா, ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையாகும். முஸ்லிம்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. நேற்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் முஸ்லிம்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி கிருஷ்ணகிரி ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதானம் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மைதானத்தில், பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் அசைவ உணவுகளை சமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து அளித்து, பக்ரீத் வாழ்த்து தெரிவித்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே தளி சாலையில் உள்ள பஜ்ஜேபள்ளி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மவுலானா நயீம் ஜான் ஹஸ்ரத் தொழுகையை நடத்தினார். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த தொழுகையில் ஜாமியா மஜீத் தலைவர் ஹாஜி முனவர் பாஷா, ஆசம் மஜீத் செயலாளர், ஹாஜி தேன்கு அன்வர் மற்றும் பேரூராட்சி துணை தலைவர் அப்துல்கலாம் மற்றும் அப்துர் ரகுமான், கவுன்சிலர்கள் ஷப்பீர், இதாயத்துல்லா உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.