பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்த பின்பு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
இறைத்தூதர் இப்ராஹிம் நபி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்ரீத் சிறப்பு தொழுகை தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு வழக்கம் போல் தூத்துக்குடி ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தூத்துக்குடி மாநகரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை சேர்ந்த முஸ்லிம்கள் ஈத்கா திடலில் ஒன்று கூடி தொழுகை நடத்தினர்.
குர்பானி
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் தொழுகை நடந்தது. இதில் உலகம் முழுவதும் கொரோனா பேரழிவு உள்ளிட்ட பெரும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். போர் உள்ளிட்டவை நீங்கி மனிதநேயம் உலகம் முழுவதும் தழைக்க வேண்டும். அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்பு தொழுகை நடந்தது.
இஸ்லாமிய மக்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுக்கின்றனர். அந்த இறைச்சியில் குறிப்பிட்ட பங்கை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
காயல்பட்டினம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த சிறப்பு தொழுகையை தவ்ஹித் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஸமது தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பெருநாள் பிரசங்கத்தினை தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கழி முகைதின் பைஜ் நிகழ்த்தினார்.
இதில் காயல்பட்டினம் தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பல ஆயிரம் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
தவ்ஹீத் பேரவை
இதேபோல் காயல்பட்டின தவ்ஹீத் பேரவையின் சார்பில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை எல்.எம். ரோட்டில் அமைந்துள்ள ஜெய்லானி நகரில் வைத்து திறந்த மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தொழுகை பள்ளிவாசல் இமாம் சூபி ஹுசைனும், பெருநாள் உரையை முகமது இத்ரீஸூம் நிகழ்த்தினர். தொழுகையில் காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவையின் தலைவர் முத்து ஹனிபா, செயலாளர் நைனா முகமது, பொருளாளர் ரைய்யான் சாகுல் அமீது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குருவித்துறை பள்ளிவாசல்
இதே போல் காயப்பட்டினத்தில் உள்ள குருவித்துறை பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனை பள்ளிவாசல் ஆலிம் காஜா மொஹைதீன் நடத்தினார்.பெருநாள் பிரசங்கத்தை ரகுமான் ஆலீம் நடத்தினார்.
தொழுகையில் பள்ளிவாசலின் தலைவர் முத்துஹாஜி, நிர்வாகிகள் பாக்கர் சாகிப், பாதுல் அஸ்காப் ஆலிம், முஹம்மது நூஹூ, காயப்பட்டினம் நகர முஸ்லீம் லீக் தலைவர் நூஹீ சாகிப், மாவட்ட முஸ்லீம் லீக் துணை தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹாப், காயல்பட்டினம் நகர சபை துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, அ.தி.மு.க. நகர செயலாளர் காயல்மவுலானா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி சையது முகமது சாகிப்,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
55 இடங்களில் தொழுகை
காயல்பட்டினத்தில் உள்ள பெரிய ஜூம்மா பள்ளிவாசல், சிறிய ஜூம்மா பள்ளிவாசல், சிறுநயினார் பள்ளிவாசல், முகைதீன் பள்ளிவாசல், முஹதும் ஜி பள்ளிவாசல், புது பள்ளிவாசல், மரக்கார் பள்ளிவாசல், ஜிராணி பள்ளிவாசல், ஆறாம் பள்ளிவாசல், தாயும் பள்ளிவாசல், கடை பள்ளிவாசல், உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும், 25-க்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பிறகு ஒருவரை ஒருவர் ஆற தழுவி தங்களுடைய பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மானங்காத்தான்
கயத்தாறு தாலுகா மானங்காத்தான் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆத்திகுளத்தில் உள்ள தர்காவிற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இந்த தொழுகையை முன்னிட்டு துணை போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், லயோலாஇக்னேஸ்சியஸ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிலிங்கம், ஆறுமுகம், பால் மற்றும் அதிரடி படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செக்கடி தெரு சுன்னத் ஜமாத் டவுன் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் மவுலவி முகமது அலி தொழுகை நடத்தினார்.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவர் உமாயூன், செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் நசீர் அகமது மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.