கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

திருநெல்வேலி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தவக்காலம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவ இறைமக்கள் 40 நாட்கள் தவம் கடைபிடித்தனர்.

இந்த தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. தொடர்ந்து எளிய வாழ்வு முறையுடன், சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறு பவனியும், 6-ந்தேதி பாதம் கழுவும் திருச்சடங்கும், 7-ந்தேதி புனித வெள்ளி பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில் இறைமக்கள் அனைவரும் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றினார்கள். பேராலய பங்குத்தந்தை சந்தியாகு, ஆயரின் செயலர் மிக்கேல் பிரகாசம், அருள்பணியாளர்கள் இனிகோ, செல்வின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் நேற்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயம் உள்ளிட்ட சி.எஸ்.ஐ ஆலயங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.


Next Story