சிறப்பு திட்டங்களை மார்ச் 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்


சிறப்பு திட்டங்களை மார்ச் 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களை மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களை மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பின் பணிகள் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் பணி முன்னேற்றம் மற்றும் நிலுவை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும், திட்டங்கள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வரும் பணிகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கூட்டுறவுத் துறையின் மூலம் கடன் இலக்கு ரூ.199 கோடியில் 28 ஆயிரத்து 970 விவசாயிகளுக்கு இதுவரையில் ரூ.196 கோடி கடன் வழங்கப்பட்டு 95 சதவீதம் இலக்கு முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக 7,142 விவசாயிகளுக்கு ரூ.25 கோடி கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறை கொடுக்கப்பட்ட இலக்கை சரியாக எய்தி உள்ளதற்கு பாராட்டுக்கள்.

விரைவாக முடிக்க வேண்டும்

அதேபோல மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் கடனுதவி, பாரத பிரதமரின் தொழில் முனைவோர் கடனுதவி மற்றும் நீட்ஸ் தொழில் முனைவோர் கடனுதவிகளில் நடப்பாண்டில் இலக்குகள் 95 சதவீதம் அடைந்துள்ளது. மீதம் உள்ள இலக்குகளை விரைவாக முடிக்க வேண்டும்.

வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை, பொறியியல் வேளாண், பொறியியல் துறை இணைந்துசெயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் கலைஞரின் மேம்பாட்டு பணிகள் சிறப்பான முன்னேற்றங்கள் உள்ளது.

மேலும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தோட்டக்கலையின் துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள இலக்குகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல தரிசு நில மேம்பாட்டு பணிகளும் அனைத்து இடங்களிலும் நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. இப்பணிகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஏதாவது நிலுவையில் இருந்தால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். புதிய பள்ளி கட்டிடங்கள் பணிகள் தொடங்காமல் இருப்பதை உடனடியாக தொடங்கிடவும், தொடங்கப்பட்ட பணிகளை பள்ளி அடுத்த கல்வியாண்டில் தொடங்குவதற்கு முன் முடிக்க வேண்டும்.

மார்ச் 31-ந் தேதிக்குள்...

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்க பெறாமல் உள்ளவர்களுக்கு விரைவாக வங்கி கடன் அட்டை வழங்கி அவர்களுக்கான உதவித்தொகை கிடைக்க முன்னோடி வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமக்கு நாமே திட்டப்பணிகளில் எஞ்சியுள்ள பணிகள நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறைகள் விரைவாக முடிக்க வேண்டும்.

அனைத்து துறை அலுவலர்களும் தமிழ்நாடு அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களில் தனி கவனம் செலுத்தி நிலுவையில் உள்ள பணிகளை வரும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடித்து இலக்கை முடிக்க வேண்டும்.

இதில் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக கலெக்டர் மூலமாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சிசுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story