சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு
சனி பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சனி பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சனி பிரதோஷம்
பிரதோஷங்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிவப்பெருமான் தேவர்களை காக்க ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை ஆகும். இதையொட்டி சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் சாதாரண நாட்களில் வரும் பிரதோஷ வழிபாடு தரும் பலன்களை போன்று ஆயிரம் மடங்கு நற்பலன்களை தரக்கூடியது சனி பிரதோஷம் என்று புராணங்கள் கூறுகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனிப்பிரதோஷ நாளான நேற்று, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காலையில் சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி 3 முறை வலம் வருதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
பழனியில் உள்ள பெரியாவுடையார் கோவில், மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிவப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் கோபால்பட்டியில் உள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி கபாலீஸ்வருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில், கோபால்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
நத்தம்
நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.