முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
பங்குனி உத்திரத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி
பங்குனி உத்திரத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திரம்
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
ஊட்டியில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்திருக்கும் திருமான் குன்றம் என்று அழைக்கப்படும் எல்க்ஹில் மலை மீது உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா, கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை 10.30 மணிக்கு நித்ய கால பூஜை நடைபெற்றது.
தேரோட்டம்
தொடர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹேமம், 108 கலச பூஜைகள், பூர்ணாகுதி நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டமானது சாமுண்டி வழியாக ஏ.டி.சி. மணிக்கூண்டு, லோயர் பஜார், மெயின்பஜார், மாரியம்மன் கோவிலுக்கு வந்தது. அங்கிருந்து மணிக்கூண்டு பாம்பே கேசில் வழியாக மீண்டும் கோவிலை அடைந்து. இதில் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து அலகு குத்தி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ், அர்ச்சகர் திருஞானசம்பந்தம் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மஞ்சள் நீராட்டு விழா
கூடலூர் குசுமகிரியில் உள்ள முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சந்தனமலை முருகன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு ஹோமமும், காலை 11 மணிக்கு சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் நடந்தது. பின்னர் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவமூர்த்தி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி சந்தன மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நந்தட்டி முருகன் கோவிலில் அதிகாலை 5 மணி முதல் விசேஷ பூஜைகளும், காலை 9 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புதிய கொடி மரம் நிறுவுதமும் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.