மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசை


மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசை
x
தினத்தந்தி 9 May 2023 12:30 AM IST (Updated: 9 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கோவிலில் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி குறிப்பிட்ட இடைவெளியில் தற்காலிக நிழற்குடை, இருசக்கர வாகன நிறுத்தம், கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு வரிசை ஏற்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றுப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்துவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும். சாலை விரிவாக்கம் செய்யும் போது மரங்களை வெட்டுவதை தவிர்த்து அவற்றை வேறு இடங்களில் மறுநடவு செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். அனுமதியின்றி மரங்கள் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர். உத்தமபாளையம் அருகே உள்ள அப்பிப்பட்டி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மக்கள் சிலர் கொடுத்த மனுவில், 'எங்கள் வீடுகளின் முன்பு தனிநபர் கழிப்பிடம், மாட்டு கொட்டகை அமைத்துள்ளோம். அவற்றை காழ்ப்புணர்ச்சியோடு அகற்ற முயற்சி நடக்கிறது. அதை தடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Next Story