மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கழிவறை
கிருஷ்ணகிரி நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கழிவறையை நகராட்சி தலைவர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில், நகராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கென சிறப்பு கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த கழிவறையை நகராட்சி தலைவர் பரிதாநவாப் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள், கல்விக்குழு தலைவர் நாகராணி, கனல்சுப்பிரமணி, மதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும், எழுத்தும் நிகழ்ச்சியை தலைவர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.