நடிகை ஜெய்குமாரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு: அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார்


நடிகை ஜெய்குமாரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு: அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நடிகை ஜெய்குமாரியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்து சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

சென்னை,

பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி (வயது 73), 2 சிறுநீரகமும் பாதித்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த 16-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உதவி கோரி 'தினத்தந்தி' வாயிலாக அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த செய்தி எதிரொலியாக, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நடிகை ஜெய்குமாரியை நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடிகை ஜெய்குமாரியிடம் அமைச்சர் பேசியதாவது:-

கோரிக்கை

நீங்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் பயப்படத் தேவையில்லை. இங்கே நீங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது 'தினத்தந்தி' நாளிதழில் வந்த செய்தியை பார்த்த பின்னரே தெரியவந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியே உங்களை வந்து சந்தித்திருக்கிறேன். உங்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நடிகை ஜெய்குமாரி அமைச்சரிடம், போதிய வருமானம் இல்லாததால் மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், தங்குவதற்கு என ஒரு வீடு ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

உதவித்தொகை

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'சிட்லப்பாக்கம் பகுதியில் வசிக்கும் உங்களுக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க ஆவண செய்யப்படும். அதேபோல் வீடுக்கும் ஏற்பாடு செய்யப்படும்' என்று உறுதி அளித்தார்.

பின்னர் அவரது சிகிச்சை செலவுக்காக அமைச்சர் ரூ.10 ஆயிரத்தை உதவித்தொகையாக வழங்கினார். இந்த சந்திப்பின்போது மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி 'டீன்' டாக்டர் சாந்திமலர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story