போதை பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு பிரிவு தொடக்கம்


போதை பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு பிரிவு தொடக்கம்
x

நீலகிரியில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

போதை பொருட்கள்

கேரளாவில் வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நுழைவதை தடுக்கவும், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து ஆயுதங்கள், போதை பொருட்கள் நீலகிரி வழியாக மாவோயிஸ்டுகளுக்கு செல்வதை தடுக்கவும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி நீலகிரியில் ஒமேகா-1, ஒமேகா- 2 என 2 பிரிவுகளில் தலா 13 போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நீலகிரியில் தற்போது 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 36 போலீசார் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதலாக தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு பயிற்சி

நீலகிரியில் நக்சல் தடுப்பு பிரிவினர், மாவோயிஸ்டு தடுப்பு வேட்டையில் மட்டும் ஈடுபட்டனர். ஆனால், தற்போது உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், மனவலிமை அதிகரிப்பு, வாகன சோதனையில் உள்ள நுணுக்கங்கள், இடர்பாடான சூழ்நிலையை எதிர்கொள்வது மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. சோதனைச்சாவடிகளில் உள்ளூர் போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், பணி சுமை காரணமாக அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. கடந்த 1-4-21-ந் தேதி முதல் 12-9-21 வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் போலீசார் மூலம் 39 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதேபோல் 2 வாகனங்கள், 11 கிலோ கஞ்சா மற்றும் 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

முழுநேரம்

நக்சல் தடுப்பு பிரிவினர் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது, 1-4-22-ந் தேதி முதல் 12-9-22 வரை 125 பேர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 வாகனங்கள், 15 கிலோ கஞ்சா மற்றும் 4,033 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சோதனைச்சாவடியில் உள்ளூர் போலீசாருக்கு பதிலாக சிறப்பு பிரிவினர் முழுநேர பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினர். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் உடனிருந்தார்.


Next Story