மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில் மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். நாள் முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அரங்கத்தில் பள்ளி மாணவிகளுக்கான பாவை விழா நடைபெற்றது. இதில் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் மகாஜன மகளிர் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, என்.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல சாத்தூர் மாரியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.