முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகாசி,
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வைகாசி விசாகம்
வைகாசி மாதம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரம் அன்று வைகாசி விசாக திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை வழிபட்டால் கிடைக்க கூடிய பலன், வைகாசி விசாக திருவிழாவில் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதனால் பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது.
காவடி திருவிழா
சிவகாசி காத்த நாடார் தெருவில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தின் போது குழந்தை வேலன் காவடி திருவிழா நடத்துவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை முத்தாலம்மன் கோவிலில் இருந்து காவடி திருவிழா தொடங்கியது.
இதில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் காவடி எடுத்து சென்றனர். இவர்கள் சிவகாசியில் உள்ள முருகன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், திருத்தங்கல் நாராயணசாமி கோவில், முருகன் கோவில்களுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கதிரேசன், சமுத்திரபாண்டியன், வேம்பார் ஆகியோர் செய்திருந்தனர்.
வாலசுப்பிரமணிய சுவாமி
வைகாசி விசாகத்தையொட்டி விருதுநகரில் உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோவில், சிவகாசி துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் கோவில், காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஆலங்குளம், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர்
சாத்தூர் தாலுகா பெரியஓடைப்பட்டியில் உள்ள ஸ்ரீவன்னி விநாயகர் கோவிலில் வைகாசி விசாகம் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு விநாயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.