பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமை

புரட்டாசி மாதம் நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது.புதனுக்கு உரிய அதிபதியாக விஷ்ணு திகழ்கிறார்.எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதம் வழிபாடுகளையும், விரதங்களையும் மேற்கொள்ள உகந்தது. இந்த மாதம் முழுவதும் அனைத்து பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்கள், 108 திவ்ய தேசங்களிலும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக களைகட்டும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து தரிசனம்செய்து வருகிறார்கள். அதன்படி நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கலியுக வெங்கடேச பெருமாள்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி தஞ்சை தெற்குவீதியில் உள்ள கலியுகவெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கலியுக வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி வெங்கடேச பெருமாள் இங்கு கலியுக வெங்கடேச பெருமாளாக காட்சி அளிக்கிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சம் செய்யப்பட்டது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் என பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

இதேபோல் தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோவில், வடக்கு வீதியில் புகழ்பெற்ற ராஜ கோபால சுவாமி கோவில் வெண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாணவெங்கடேச பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் கோவில்தெரு ஜனார்த்தன பெருமாள், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், பள்ளியக்கிரகாரம் கோதண்டராம பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அய்யங்கடை ராமர் கோவில்

தஞ்சை அய்யங்கடைத்தெரு ராமர் கோவி்ல் உள்ளது. இந்த கோவிலில் ராமர் - சீதாதேவி மற்றும் லெட்சுமணன், பரதன் அனுமனுடன் பட்டாபிஷேக ராமனாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பட்டாபிஷேகம் ராமனுக்கு சிறப்பு திருமஞ்சனம், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மலர் அலங்காரம்

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள விஜயராமர் கோவிலில் பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story