சேலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு வழிபாடு
குரு பெயர்ச்சியையொட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருபெயர்ச்சி
குருபகவான் நேற்று முன்தினம் இரவு 11.24 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு மகா யாக வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது. அதன்பிறகு குருபகவானுக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். மேலும், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கோவிலில் சிறப்பு பரிகாரங்களை செய்து வழிபட்டனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
இந்த ஆண்டு குரு பெயர்ச்சியில் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படும் என்றும், மீதமுள்ள மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 7 ராசிக்காரர்களும் குருபகவானுக்கு உரிய பரிகாரங்கள் செய்து வாழ்வில் வளம் பெறலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சேலம் தாதகாப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி நேற்று மாலை சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. இதில் தாதகாப்பட்டி, குகை, களரம்பட்டி, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பூ, பழம், தேங்காய், நெய் ஆகியவை படைத்து பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது.
மாவட்டம் முழுவதும்...
இதேபோல், சேலம் டவுன் சுகவனேசுவரர் கோவிலிலும் குரு பெயர்ச்சி விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு குருபகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. டவுன் காசிவிஸ்வநாதர் கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடந்தது.