சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஆவணி மூல நாளில் மதுரையில் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்ந்ததாகும். வந்தி என்கிற ஏழை மூதாட்டிக்காக பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டதும், மாணிக்கவாசகரின் பக்தியை உணர்த்த நரிகளை பரிகளாக்கியதும் ஆவணி மூலத்தில் ஆடிய திருவிளையாடலாகும். இதை நினைவு கூறும் வகையில் மதுரை உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் கோவிலில் ஆவணி மூல சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், எழுந்தருளி சுவாமிகளான சந்திரசேகர் மற்றும் சந்திரமவுலி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் மலர் அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் சந்திரமவுலி அம்மன் சமேத சந்திரசேகரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, தமிழ் தேவார திருமுறைகள் இசைக்கப்பட்டு மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கோவில் குருக்கள் செந்தில் மகா தீபாராதனை செய்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தா.பழூரை சேர்ந்த வாணிப செட்டியார் சமூகத்தினர்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.