ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகாசி

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள ஸ்ரீதுர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அதேபோல ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு தங்கக்கவச அலங்காரமும், பாலவநத்தம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

தாயில்பட்டி

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராமலிங்கபுரத்தில் அமாவாசையை முன்னிட்டு சவுடாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதேபோல விஜயரெங்கபுரம் ஊராட்சி துரைசாமிபுரத்தில் உள்ள சவுடம்மன் அம்மன் கோவில், வெம்பக்கோட்டை அருகே உள்ள இனம் மீனாட்சிபுரம் கிராமத்தில் சவுடாம்பிகை அம்மன் கோவிலிலும் சிறப்பு பூைஜ நடந்தது.

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பசும்பொன்நகரில் உள்ள அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்குண்டம்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

ராஜபாளையம்

ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தேவதானம் அசையாமணி விலக்கு பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் வழியில் அமைந்துள்ள கல்லணை ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் 12 அடி உயரமான ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள சாய்பாபா கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர், சஞ்சீவி மலை பகுதியில் உள்ள வேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


Next Story