அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமைையயொட்டி நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி வெள்ளிக்கிழமை
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 5.30 மணியளவில் இருந்து பகல் 11 மணி வரை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு பகல் 12 மணியளவில் அம்மனுக்கு உச்சி கால பூஜை நடந்தது. இதில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கூழ் படைத்து வழிபாடு
அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார். கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனுக்கு கூழ் படைத்து வழிபாடு செய்தனர். பின்னர் கூழை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
இதுதவிர ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையன்று அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திண்டுக்கல் நகர் பகுதிகளில் வீதிஉலா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து கொடிமரத்துக்கு பாலாலயம் செய்து இருப்பதால் வீதிஉலா நடைபெறவில்லை.
அபிராமி அம்மன் கோவில்
இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணியளவில் அபிராமி அம்மன் மற்றும் ஞானாம்பிகை அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து அம்மனுக்கு முத்தலங்காரம் மற்றும் சன்னதி முன்பு முத்துப்பந்தல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை 4.30 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மகா தீபராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வரசித்தி வாராகி அம்மன்
சாணார்பட்டி அருகே உள்ள கம்பளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2-வது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மன் சிம்காரூட வாராகி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனர். பழனியில் ரெயில்வே காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நத்தம் மாரியம்மன்
திண்டுக்கல் பாரதிபுரம் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது. நத்தம் சாலை அஷ்டலட்சுமி கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில், தெற்கு ரத வீதி அங்காள பரமேஸ்வரி கோவில், கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நத்தம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவலில் அன்னக்கூழ் ஊற்றப்பட்டது. இதேபோல் பகவதி, காளியம்மன், ராக்காயி, தில்லை காளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.