அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்


ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதம் முழுக்கவே அம்மனைத் தரிசிப்பது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். அதன்படி நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மன்கோவில்கள், முனியாண்டவர் கோவில்களில் சிறப்புவழிபாடு நடந்தது.

தஞ்சை கீழவாசல் வடபத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் பூமாலை, எலுமிச்சை மாலைகளை சாமிக்கு வழங்கி, அகல்விளக்குகள், எலுமிச்சை தோளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கோடியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

முனியாண்டவர் கோவில்

தஞ்சை புதுஆற்றங்கரை ஜி.ஏ.கெனல் ரோட்டில் உள்ள முனியாண்டவர் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சக்திமுனியாண்டவர், நாகநாத விநாயகர், முருகன், நாகநாதசாமி, நாகேஸ்வரிஅம்மன், விஷ்ணுதுர்க்கை, கருப்பண்ணசாமி, மதுரைவீரன், சனீஸ்வரர், ஜெயவீர மகா ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு ஜெயவீர மகா ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி விழா நடக்கிறது. இதேபோல் நாஞ்சிக்கோட்டை சாலை உழவர் சந்தை அருகே உள்ள முனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுமங்கலி பூஜை

தஞ்சை விளார் சாலை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடந்தத. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், துர்க்கை அம்மன் வழிபாட்டு குழுவினரும் செய்திருந்தனர்.

திருவையாறு

திருவையாறு மேலவீதியில் உள்ள பராசக்தி மாரியம்மன்கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் சிறப்பு புடவை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திருவையாறு சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனுக்கு விளக்கு ஏற்றியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். திருவையாறு சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்காட்டுப்பள்ளி சவுந்தரநாயகி அம்மன் சமேத அக்னிஸ்வரர் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி முன்னிட்டு அக்னீஸ்வரஸ்வாமி, அம்மன் துர்க்கை அம்மன், உள்ளிட்ட அனைத்து சாமிகளுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் பிரகாரத்தில் அமைந்திருக்கும் ரோம ரிஷி சித்தருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணிக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி நகரை சுற்றி அமைந்துள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வன்மீகிநாதசாமி கோவிலில் உள்ள 18 கை வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வடக்கு பூதலூர் நாச்சியார் அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story