அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு வழிபாடு
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெரு, வண்டிக்கார தெரு, ஆஸ்பத்திரி ரோடு, சிங்கார தெரு, தேவேந்திர குல வேளாளர் தெரு, பெரிய தெரு ஆகிய இடங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.
தாமரைக்குளம், வெங்கடரமணாபுரம், சின்ன நாகலூர், பெரியநாயகலூர், அரசு சிமெண்டு ஆலை, கயர்லாபாத் ஆகிய ஊர்களிலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். அரியலூர் மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்க கவசம் சாத்தி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் காளியம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், அம்மன் வேடமிட்டும் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஜெயங்கொண்டம், தா.பழூர், மீன்சுருட்டி
ஜெயங்கொண்டத்தில் கழுமலை நாதர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன், கும்பகோணம் சாலையில் உள்ள மகா மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், செங்குந்தபுரம் மாரியம்மன், இலையூர் செல்லியம்மன், சின்னவளையம் திரவுபதி அம்மன், வாரியங்காவல் மாரியம்மன், மலங்கன்குடியிருப்பு அரசமரத்து முத்து மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள வீர கணபதி, பாப்பாத்தி அம்மன், பச்சையம்மன், சமேத அக்கினி வீரனார், கருப்பண்ணசாமி, சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பூங்கரகம், பால்குடும் எடுத்து வந்தனர். மாலையில் விளக்கு பூஜை நடந்தது. மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில் காளி ஆட்டமும், இரவில் துர்க்கை அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.