முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பங்குனி உத்திரம்
தேனி மாவட்டத்தில் பங்குனி உத்திரம் பண்டிகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தேனி கணேச கந்தபெருமாள் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தேனி தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். அங்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதேபோல், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மாவூற்று வேலப்பர் கோவில், லோயர்கேம்ப் வழிவிடு முருகன் கோவில், போடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும், பிற கோவில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
கம்பம்
கம்பம் சுருளிவேலப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில் சுவாமிக்கு மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், இளநீர், பழங்கள், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கவுமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சன்னதி, கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் சன்னதி, ஆதிசக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிர மணியசுவாமி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.