கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:30 AM IST (Updated: 25 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலை 6 மணியளவில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஏகாந்த சேவை அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவருக்கு புஷ்ப அலங்காரம், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. மாலையில் பஜனை பாடல்கள் பாடப்பட்டது.

அதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதேபோன்று திண்டுக்கல் எம்.வி.எம். நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமிக்கு நேற்று முன்தினம் மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலையில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

நாராயண பெருமாள் கோவில்

மேலும் திண்டுக்கல் யாதவ மேட்டுராஜக்காபட்டி கிருஷ்ணன் கோவில், மெயின்ரோடு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களிலும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவில், வேணுகோபால பெருமாள் கோவில், ராமநாதநகர் லட்சுமி-நரசிம்மர் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், கண்ணடிய பெருமாள் கோவில் என அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெருமாளுக்கு விளக்கு ஏற்றியும், துளசி மாலை அணிவித்தும் வழிபட்டனர். புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது. பல கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் பழைய வத்தலக்குண்டுவில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பழைய வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.


Next Story