கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கோவில்களில் தை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதேபோல் விசாலாட்சி அம்மனுக்கு மாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.இதேபோல் தா.பழூரில் உள்ள நவசக்தி சங்கு கணபதி கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். இடங்கண்ணியில் திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிந்தாமணி மாரியம்மன் கோவில், காரைக்குறிச்சி காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், தா.பழூர் காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், செல்லியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தை மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.