நவநீத கிருஷ்ணகோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு


நவநீத கிருஷ்ணகோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு
x

தஞ்சை நவநீதகிருஷ்ணன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் அவல்முடிச்சுகளை நவநீதகிருஷ்ணன் பாதத்தில் வைத்து வணங்கினர்.

தஞ்சாவூர்

தஞ்சை நவநீதகிருஷ்ணன் கோவிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் அவல்முடிச்சுகளை நவநீதகிருஷ்ணன் பாதத்தில் வைத்து வணங்கினர்.

நவநீத கிருஷ்ணன் கோவில்

தஞ்சை மேல வீதியில் புகழ் பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இங்கு ருக்மணி லட்சுமி அம்சத்துடனும், பாமா பூமாதேவி அம்சத்துடனும் இருப்பதாக ஐதீகம்.

பக்தர்களின் பிரார்த்தனைகளை பூமாதேவி வானத்தில் உள்ள லட்சுமிதேவியிடம் எடுத்து உரைக்கிறார். அதனை லட்சுமி தேவி பகவான் கிருஷ்ணரிடம் சமர்ப்பித்து அவர்களது பிரார்த்தனைகள் நிறைவேற வழிவகை செய்கிறார். இக்கோவிலில் கிருஷ்ணர், ருக்மணி, பாமா சமேதராக எழுந்தருளி இருப்பது மிக சிறப்பான அம்சமாகும்.

அவல் முடிச்சு

புண்ணிய நகராகிய துவாரகையில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணராக அவதரித்து மணிமுடித்து மன்னராய் வீற்றிருந்த காலத்தில் வேதங்களை கற்று வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த குசேலன் தன் மனைவியின் வேண்டுதலின் பேரில் தன் பால்ய நண்பன் கிருஷ்ணரை காணச் சென்றார். கிருஷ்ணன் குசேலனை அன்பொழுக தழுவி வரவேற்று உபசரித்து விருந்து அளித்தார். அப்போது கிருஷ்ணரிடம், குசேலன் கந்தல் துணியில் முடிந்த அவலை கேட்டு வாங்கி முகம் மலர்ச்சியுடன் இரண்டு கைப்பிடி சாப்பிடவும் குசேலன் குடிசை விண்ணை தொடும் மாளிகை ஆனதாக ஐதீகம்.

துவாரைக்கு நிகராக செல்வம் நிரம்பி வழியும் பெயர் பெற்ற நாள் அட்சய திருதியை என்று மக்களால் நம்பப்படுகிறது. அன்றைய தினம் இக்கோவிலில் பக்தர்கள் அவரவர் கைகளால் மூன்று கைப்பிடி அளவு அவலை புது துணியில் அல்லது துண்டில் முடிந்து மூன்று முறை கோவிலை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். செல்வம் வளம் ஏற்படும்.குசேலன் பெற்ற குபேர வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை சிறப்பு வழிபாடு

அதன்படி அட்சய திருதியையொட்டி நேற்று நவநீத கிருஷ்ணன் கோவிலில் காலை 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அவல் முடிச்சு ஏந்தி மூன்று முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணன் பாதத்தில் அவல் முடிச்சு சமர்ப்பித்தார்கள். சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கிருஷ்ணனின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் அட்சய திருதியையும் இன்று இருப்பது கூடுதல் சிறப்பாகும்.இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அட்சய திருதியை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.


Next Story