உமையநாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
எஸ்.தரைக்குடி கிராமத்தில் உள்ள உமையநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் உமைய நாயகி அம்மன் மேற்கூரை இன்றி வெயிலிலும் மழையிலும் திருமேனிபடும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆனி 31-ந்தேதி நிறைவு நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக, அலங்கார பூஜைக்கு பின்னர் மாலையில் கோவில் நடை அடைக்கப்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறும் போது, இந்த கோவிலில் பல ஆண்டுகளாக ஆடி மாதம் முழுவதும் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். இங்கிருந்து உமையநாயகி அம்மன் ராமேசுவரம் கோவில் தீர்த்தங்களில் புனித நீராட செல்வதாக ஐதீகம். இதனால் இந்த ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டு இருக்கும். ஆவணி முதல் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அம்மனின் முதல் தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.
முன்பு கருவறை வாசல் படி முன்பு பச்சரி தவிடு பரப்பப்பட்டு வெளியே சென்று திரும்பிய அம்மனின் திருவடி பாதச்சுவடு தென்பட்டுள்ளதாக புராண வரலாறு கூறப்படுகிறது. காலங்காலமாக நிலவும் நடைமுறையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை ராஜாராம், செந்தூர்பாண்டியன், பொன்னு பெருமாள், வீரமுருகன், வக்கீல் அழகுராஜா உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.