1,100 கிலோ பழங்களால் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் 1,100 கிலோ பழங்களால் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்னூர்
குன்னூரில் பிரசித்திபெற்ற தந்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று மேல் கடைவீதி பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி ஆதிசேஷ கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
விழாவையொட்டி குன்னூர் துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து பால்குட தீர்த்தம் மற்றும் அபிஷேகப் பொருட்கள், செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து தந்தி மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு தமிழ்நாட்டில் விளைய கூடிய பல்வேறு வகையான பழங்கள் 1,100 கிலோ அளவில் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்பு பூஜையில் வைக்கப்பட்ட பழங்கள் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.