சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
மாட்டு பொங்கலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு அலங்காரம்
பெரம்பலூா் மாவட்டத்தில் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. அதன்படி இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேசுவரருக்கு நேற்று காலையில் 36 வகையான வாசனை திரவியங்களை கொண்டு குருக்கள் சிறப்பு அபிஷேகம் நடத்தினர். பின்னர் மதியம் உபயதாரர்கள், பக்தர்களால் வழங்கப்பட்ட மொத்தம் 1,008 கரும்புகள், 64 கிலோ எடையுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள், மலர்களை கொண்டு நந்திகேசுவரருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலையில் கோவில் குருக்கள் மூலவர் வாலீஸ்வரருக்கு தீபாராதனை காட்டி விட்டு, நந்திகேசுவரருக்கு சர்க்கரை பொங்கல், லட்டு, சீடை, அதிரசம், கரும்பு ஆகியவற்றை படையலிட்டு, மகா தீபாராதனை காட்டினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திகேசுவரரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திரளான பக்தர்கள் தரிசனம்
இதேபோல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.