மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோவிலில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற பழமையான வதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையை சுற்றி நான்கு திசைகள் மற்றும் மயிலாடுதுறையை மையமாக வைத்து 5 சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் காவிரி வடகரையில் அமைந்துள்ள வதாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வழிகாட்டும் வள்ளலான மேதா தட்சிணாமூர்த்தி கோவில் புகழ்வாய்ந்தது. மேதா தட்சிணாமூர்த்தி பஞ்ச குரு தலங்களில் ஒன்றாக விளங்குகிறார். பல்வேறு சிறப்புகளுடைய இக்கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மார்கழி மாத கடைசிவியாழனை முன்னிட்டு மேதா தெட்சிணாமூர்த்தி நேற்று முன் தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு இரவு மேதா தட்சிணாமூர்த்தி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு கோபூஜை, அசுவ பூஜை, ஒட்டக பூஜை செய்து சிறப்பு தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆதீனகர்த்தருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.