பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாக பூஜை
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது. சிவராத்திரி, மகா சிவராத்திரிகளில் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு யாக பூஜையும், உற்சவ வழிபாடும் நடைபெறுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு யாக பூஜை செய்து, மாணவர்களுக்கு பேனா, பென்சில் பூஜையில் வைத்து வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் 11 மணி வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளின் கல்வி, ஞானம், ஞாபகத்திறன் மற்றும் அறிவாற்றல் மேம்பட பஞ்ச தேவதைகளான விநாயகர், சரஸ்வதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு கலச பூஜை, சிறப்பு யாக வேள்வி நடத்தி, பேனா, பென்சில் பூஜையில் வைத்து பள்ளி நிர்வாகத்தின் சங்கல்பம், பெற்றோர்கள் சங்கல்பம் நடைபெற்றது.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து 1,000 மாணவர்களுக்கு பேனா, பென்சில்களை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி.குமரேசன் வழங்கினார்.
மேலும் இந்த சிறப்பு யாக பூஜையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.