சிவசுப்பிரமணியர் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம்
தேசூர் பேரூராட்சி சிவசுப்பிரமணியர் கோவிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாகம் நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் பேரூராட்சி அய்யாசாமி முதலியார் தெருவில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவிலில் துணைவியாருடன் கூடிய நவக்கிரக சன்னதியில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு மகா யாகம், சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக வள்ளி, தெய்வானை, சிவசுப்பிரமணியர், கல்யாண முருகர், தூண்டுகை விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் நவக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, யாகம் நடத்தி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்லும் குரு பகவானால் ஏற்படும் நன்மைகள் பற்றி சொற்பொழிவு நடந்தது.
பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் தரணிவேந்தன், முருகன், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் பிரேம்குமார், அர்ச்சனா, நித்திய சொற்பொழிவாளர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவா செய்திருந்தார்.