வேகத்தடைகள் அமைக்கப்படுமா ?
வேகத்தடைகள் அமைக்கப்படுமா ?
அருள்புரம்
திருப்பூர் அருகே நொச்சிப்பாளையம் பிரிவிலிருந்து செல்லும் சாலை, ஏ.பி.நகர்,நொச்சிப்பாளையம், அவரப்பாளையம், அல்லாளபுரம், உகாயனூர் வழியாக பொங்கலூர் செல்கிறது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் விபத்துக்கள் அதிகரித்து வருவதால் தெற்கு வட்டார போக்குவரத்து வாகன ஆய்வு செய்ய செல்லும் இடம்,ஏ.பி.நகர் பஸ் ஸ்டாப் ஆகிய 2 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடைகள் அமைக்க முன் வந்தனர். இதற்காக 2 இடங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகின்றன. தாருடன் ஜல்லிக்கற்கள் ரோட்டில் இறுகிவிட்டன. ஆனால் வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் இதுவரை தொடங்கவில்லை. இதனால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே இந்த 2 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.