ஒன்று பட்டால் சாதனைகளை எட்டலாம்; காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு
ஒன்று பட்டால் சாதனைகளை எட்டலாம் என்று காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
காந்திகிராம பல்கலைக்கழக கூட்டுறவுத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில், பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கூட்டுறவு இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி, அதன் பங்களிப்பு முக்கியமானது. ஒன்றுபட்டால் சாதனைகளை எட்டலாம். சுய சுத்தம் மற்றும் தன்னார்வ கலாசாரத்தின் மூலம் காந்திய தத்துவத்திற்கு ஏற்ப காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வைத்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பங்களிப்பையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் கற்றறிந்து செயல்படுவது அவசியம். இந்தியாவை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல கூட்டுறவு இயக்கங்களின் செயல்பாடுகள் அதிக பங்களிப்பை தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கூட்டுறவுத்துறை தலைவர் பிச்சை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு பயிற்சி முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.